விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அந்த  கூட்டத்தின் நடுவே, திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஒரு கார் அங்கு வந்தது. உடனடியாக சில அதிமுக தொண்டர்கள், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கருதி, காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

ஆனால் பின்னர் அந்த காரில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த கார், திமுக சேர்மனின் சகோதரருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் EPS கூட்டத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து சூழ்நிலையை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில் திமுக நிர்வாகியின் சகோதரர் கார் கூட்டத்தில் நுழைந்ததாக கூறப்படும் நிலையில் அதில் மூச்சுத்திணறல் வந்தது போல் சிறுவன் நடித்ததாக தற்போது புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த காரை ஓட்டி வந்ததே 18 வயது பூர்த்தி செய்யாத அந்த சிறுவன் தான் எனவும் அந்த சமயத்தில் தப்பிப்பதற்காக சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது போல் நாடகமாடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.