பீகாரில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘வாக்கு அதிகார பயணம்’ என்ற பெயரில் இரண்டு வாரங்களாக பேரணி நடத்தி, மக்களிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் செல்லும் அவர், பாஜகவை குறிவைத்து “ஹைட்ரஜன் குண்டு” வெளிப்படுத்தப்பட உள்ளதாக எச்சரித்தார்.

“வாக்கு திருட்டு, நாற்காலியை விடு” என்ற முழக்கம் பீகாரில் மட்டுமல்ல, சீனா வரை எதிரொலிப்பதாக மோடியை கிண்டலடித்தார். “அணுகுண்டை விட பெரியது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, தயாராக இருங்கள். இந்த வெளிப்பாட்டுக்குப் பின் மோடி முகம் காட்ட முடியாது,” என்று ராகுல் உறுதியாகக் கூறினார்.

மகாராஷ்டிரா, கர்நாடக தேர்தல்களில் வாக்கு மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், இதை அம்பலப்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத், “ராகுல் காந்தியின் பேச்சை புரிந்துகொள்ள நேரமாகிறது. அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்று தேர்தலுடன் தொடர்பில்லாமல் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக தன்னை இழிவுபடுத்துகிறார்,” என்று விமர்சித்தார்.

ராகுலின் குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை என்று கூறிய அவர், தேர்தல் ஆணையத்தை குறை கூறுவது நாட்டு மக்களை அவமதிப்பதாக உள்ளதாகத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், கர்நாடகத்தின் மகாதேவபுராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் பதிவானதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். இந்த “ஹைட்ரஜன் குண்டு” வெளிப்பாடு மோடி அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்தது.