தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை மன்னாரயன் தட்டை பகுதியைச் சேர்ந்த விஜித்ரா (23) மற்றும் அவரது தம்பி பொன்செல்வன் (18) ஆகியோர் மெயின் பஜார் ரோட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ஒரு பை கீழே கிடப்பதைக் கண்டனர். அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே 6 தங்க மோதிரங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
உடனடியாக அந்த பையை எடுத்துக்கொண்டு ஏரல் காவல் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு நகை வியாபாரி கடைக்கு செல்லும்போது பையை தவறவிட்டதை உறுதி செய்து, அவரை அழைத்து மோதிரங்களை பத்திரமாக ஒப்படைத்தனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்தபோது, பையை கண்டோம். உள்ளே தங்க மோதிரங்கள் இருந்ததால், உரியவரை கண்டுபிடிக்க முடியாமல் பதற்றமடைந்தோம். உடனே போலீசில் ஒப்படைத்தோம்.
பிறர் பொருளை எடுத்தால், நமது பொருளும் தொலைந்து போகலாம் என்பதால், நேர்மையாக இருக்க வேண்டும்,” என விஜித்ரா தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அக்கா-தம்பியின் நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார். இதேபோல், திருப்பூர், நாமக்கல் பகுதிகளிலும் இழந்த பணம், நகைகளை நேர்மையாக ஒப்படைத்த சம்பவங்கள் நடந்து, மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளன.
