உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக, 2025-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 146 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்தில் இருக்க, 142 கோடியுடன் சீனா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து 2060-ம் ஆண்டுக்குள் 165 கோடி ஆகும் என கணிக்கப்படுகிறது.
இந்த அளவுக்கு பெரிய மக்கள் தொகையுடன் வாழும் இந்தியர்களுக்கு தற்போது முக்கியமான சவாலாக சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகியுள்ளது. குறிப்பாக, நகரங்களில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. உலக சுகாதார மையத்தின் (WHO) தரநிலைகளை விட மிக அதிக அளவிலான காற்று மாசுபாடு, பெரும்பாலான இந்திய பகுதிகளில் காணப்படுவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், PM2.5 (Particulate Matter) எனப்படும் நுண்ணிய துகள்கள் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் அதிகமாக உள்ளன. உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளை விட 8 மடங்கு அதிகமான அளவில் PM2.5 துகள்கள் இந்திய காற்றில் இருப்பதால், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 3.5 ஆண்டுகள் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதே நேரத்தில், இந்தியாவில் காற்றின் தரத்தை சர்வதேச அளவிற்கு இணையாக மேம்படுத்தினால், 46% இந்தியர்களின் ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
