பெங்களூரு ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தில் 16 மணி நேரம் பணியில் இருந்த 52 வயது பாதுகாவலர் ஒருவர், உறக்கநிலையில் (சிலீப்வாக்கிங்) பிளாட்ஃபார்ம் விளிம்பில் நடந்து செல்லும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பாதுகாவலர்களின் நீண்ட பணி நேரம் குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி, அருகில் இருந்த பயணி ஒருவரால் உடனடியாக மீட்கப்பட்டார்.

பிளாட்ஃபார்ம் எண் 2-ல் கண்களை மூடியபடி நடந்து சென்ற பாதுகாவலர், விளிம்பில் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததும், உதவி கோரி கத்தினார். உடனே, எதிர் பிளாட்ஃபார்மில் இருந்த மற்றொரு பாதுகாவலர் அவசர மின்சார நிறுத்தி (ETS) பயன்படுத்தி தண்டவாளத்தின் மின்சாரத்தை துண்டித்தார்.

இதனால் மெட்ரோ சேவை 6 நிமிடங்கள் தடைபட்டது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழக (BMRCL) அதிகாரி ஒருவர், இந்த பாதுகாவலர் 16 மணி நேரம் பணியாற்றியதாகவும், குறுகிய ஓய்வுக்குப் பின் மீண்டும் பணிக்கு திரும்பியதாகவும் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இது குறித்து உள்விசாரணை தொடங்கப்பட்டு, நிலைய மேலாளரும் விசாரிக்கப்படுகிறார்.