திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர்.

அங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுப்பம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மருத்துவமனை ஊழியரான ராமர் (25) என்பவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பம்மாள் கூச்சலிட்டதால் பதறிய ராமர், திருடிய நகையை வாயில் போட்டு விழுங்கி, கழிவறைக்கு ஓடினார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அவரைச் சுற்றி வளைத்து விசாரித்தபோது, நகையை விழுங்கியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் விரைந்து வந்த காவல்துறையினர், ராமருக்கு ‘இனிமா’ மருந்து கொடுத்து நகையை வெளியே எடுத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.