இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாவதற்கு தயாராகிறது. ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், தனது உரையில் ”விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன்.
நான் அவரது ரசிகர்களை பிடிக்க முயற்சி செய்கிறேன் என்று கூறப்படுவது தவறு. ரசிகர்களை யாராலும் பிடிக்க முடியாது, அவர்கள் ஒரு பவர்,” என உருக்கமாக தெரிவித்தார். மேலும், “நான் நல்ல படங்களை பாராட்டுகிறேன். அது ஒரு பெரிய விஷயமா? நல்லது செய்வதற்கு யோசிக்க வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
சிவகார்த்திகேயனின் இந்த உரை, விழாவில் இருந்த ரசிகர்கள் மற்றும் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘மதராஸி’ திரைப்படம், ஃபுல் ஆக்ஷனும், சென்டிமென்ட்டும் கலந்த ஒரு மாஸ் படம் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸும் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதால், படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
