கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பின் இருவரும் பணி மாற்றம் பெற்று வேறு இடங்களில் வேலை பார்த்தனர்.
இந்நிலையில், லட்சுமிக்கு தனது பள்ளியின் பழைய தோழர் கிருஷ்ணமூர்த்தியுடன் நெருக்கம் அதிகரித்து, அது கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரங்களில் லட்சுமி, தனது காதலனை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்தார். இதனை அவரது மகன் கண்டு அதிர்ச்சியடைந்து தந்தை இம்தியாசிடம் தெரிவித்தார். பலமுறை எச்சரித்தும் லட்சுமி காதலை கைவிடவில்லை.
2016-ம் ஆண்டு ரம்ஜானை முன்னிட்டு இம்தியாஸ் வீட்டிற்கு வரும்போது, மனைவியும் கள்ளக்காதலனும் உல்லாசத்தில் இருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் லட்சுமி, தனது காதலனை தொடர்புகொண்டு கணவனை கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து கிருஷ்ணமூர்த்தி உடன் சிவராஜ் என்பவரும் வந்தனர். மூவரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் இம்தியாஸை அடித்து படுகொலை செய்தனர். உடலை ஆட்டோவில் கொண்டு சென்று கால்வாயில் வீசினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இம்தியாஸின் தம்பி போலீசில் புகார் செய்ததின் பேரில், லட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு பத்ராவதி கோர்ட்டில் தொடரப்பட்டு, கடந்த 9 ஆண்டுகளாக நீடித்து வந்தது. வழக்கின் இறுதியில், விசாரணையை நடத்திய நீதிபதி இந்திரா மயில்சாமி செட்டியார் தீர்ப்பு வழங்கினார்.
அதில், கணவரை திட்டமிட்டு கொன்ற லட்சுமிக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், சாட்சியை அழிக்க உதவிய சிவராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் சிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மரணதண்டனை அறிவிக்கப்பட்டதும் ஆசிரியை லட்சுமி நீதிமன்றத்தில் கதறி அழைத்த காட்சியும் வேதனையை ஏற்படுத்தியது.
