ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஒவ்வொரு ஆண்டும் அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார்.

அவரிடம் ரூ.931 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனமே ஆகும். 1992-ஆம் ஆண்டு ரூ.1 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடனும் ரூ.7 ஆயிரம் செலுத்தப்பட்ட மூலதனத்துடனும் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் தற்போது ரூ.931 கோடி மதிப்பை எட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் நாரா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு மட்டும் 24.37 சதவீத பங்குகள் உள்ளன. இதனால், அந்த பங்குகள் நேரடியாக சந்திரபாபு நாயுடுவின் சொத்தாகவே கணக்கிடப்படுகின்றன.

மொத்தத்தில், நாரா குடும்பத்தினர் 41.3 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். 1995-இல் ரூ.25 கோடி மதிப்பில் இருந்த இப்பங்குகள் தற்போது ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளன. மேலும், 2024 ஜூன் மாதத்தில் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. தற்போது அந்த நிறுவனத்தில் 1,81,907 பங்குதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார். அவரிடம் ரூ.332 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடி சொத்துக்களுடன் உள்ளார்.

அதே சமயம், மிகக் குறைந்த சொத்துக்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார். அவரிடம் வெறும் ரூ.15.38 லட்சம் சொத்துக்கள் மட்டுமே உள்ளன. இவருக்கு அடுத்த இடங்களில் ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ரூ.55.24 லட்சம்) மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் (ரூ.1.18 கோடி) ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியல் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது.