2026ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்திற்கு தயாராகி வருகின்றன. திமுக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டி, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக, முழுவீச்சில் தேர்தல் பரப்புரையை துவக்கியுள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் நெல்லை மாவட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
இந்த மாநாட்டில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டு உரையாற்றினார். திமுக அரசின் கடந்த வாக்குறுதிகளை நினைவூட்டிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி?” என தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார். திமுக வழங்கிய பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என அவர் விமர்சனம் செய்தார்.
“சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவோம் என்று சொல்லி இப்போது என்ன செய்கிறீர்கள்? பெட்ரோல், டீசல் விலை குறைவது எங்கே? மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்று கூறினீர்கள் – அந்த திட்டம் எங்கே சென்றது?” என நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார். மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்விக் கடன், தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை, அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் ஆகியவை அனைத்தும் ஆளுநருக்கு சொன்ன வாக்குறுதிகள் என்றும், இன்று மக்கள் எதிர்பார்ப்பில் தவிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
