கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (MGNREGA) மூலம் பணி பெற்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர்.

ஆனால், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தியதற்கான ரசீதை காண்பித்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த முறைகேடு குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு சென்று, அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த செயலாளர் வேல்முருகனிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில், அவரை அலுவலகத்திற்குள் பூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மங்களூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கரசி மற்றும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அலுவலகத்தை திறந்து வேல்முருகனை மீட்டனர்.

இதனிடையே, சிலர் வேல்முருகனை தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.