உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில், காஷிபூரில் உள்ள குரு நானக் பள்ளி என்ற தனியார் கல்வியில் கடந்த புதன்கிழமை அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. 9-ம் வகுப்பு மாணவர் சமரத் பாஜ்வா, தனது லஞ்ச் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து வைத்து, தனது இயற்பியல் ஆசிரியர் கங்கன்தீப் சிங் கோலியை நோக்கி சுட்டார். மதிய இடைவேளைக்குப் பிறகு ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறும்போது இந்தத் தாக்குதல் நடந்தது.

துப்பாக்கிக் குண்டு ஆசிரியரின் முதுகெலும்பு அருகே பாய்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் மாணவரை அறைந்த சம்பவத்தால் கோபமடைந்த மாணவர், பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படுகிறது. ஆசிரியர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டார்.

மருத்துவர்கள் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு குண்டை வெற்றிகரமாக அகற்றினர். சிகிச்சையளித்த மருத்துவர் மயங்க் அகர்வால் கூறுகையில், திரு. கோலியின் நிலை தற்போது நிலையாக உள்ளது. அவர் மேலும் கண்காணிப்பிற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளார். மேலும் அடுத்த 72 மணி நேரம் அவரது மீட்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், காவல்துறை மாணவர் பயணப்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.  மாணவர் எவ்வாறு துப்பாக்கியைப் பெற்றார் என்பதை குறித்து கண்டறிய, மாணவரின் பெற்றோரிடம் விசாரணை மற்றும் தடயவியல், சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல சிபிஎஸ்இ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.

ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளில் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி, காஷிபூரில் ராம்லீலா மைதானத்திலிருந்து எஸ்டிஎம் அலுவலகம் வரை அமைதி ஊர்வலம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.