இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து, சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் அளவிலான மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யும் அசாத்திய திறன் கொண்டது.
2,392 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், கடந்த மாதம் 30-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இதில், எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் ‘சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்’ தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விண்ணில் செலுத்தப்பட்ட 17 நாட்களில், 12 மீட்டர் நீளம், 64 கிலோ எடையுள்ள ‘தங்க மலர்’ ஆன்டெனா விரிந்து பணியை தொடங்கியது. இதன் 123 இலகுரக எந்திரக் கட்டமைப்புகள், வலிமையுடன் பேரழிவுகளை கூர்ந்து கவனிக்க உதவுகிறது. பகல், இரவு, மழை, மேகம், மூடுபனி என எந்த சூழலிலும் இது செயல்படும் திறன் கொண்டது.
ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியின் முழு வரைபடத்தை உருவாக்கி, 3டி திரைப்படம் போல மாற்றங்களை விஞ்ஞானிகளுக்கு வழங்கும் இந்த செயற்கைக்கோள், காலநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை துல்லியமாக கணிக்க உதவும். இதன் ஆன்டெனாவில் உள்ள சக்திவாய்ந்த செயற்கை துளை ரேடார், 19 கிலோமீட்டர் பரப்பில் திறம்பட இயங்குகிறது.
இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குனர் சஞ்சய் சர்மா, “ஆன்டெனா தங்கப் பூவைப் போல விரிந்தபோது, அது தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல, உணர்ச்சிகரமான தருணமாகவும் இருந்தது,” என்றார். நாசாவின் ரோசாலி வேகா, “நிசார், காலநிலை நெருக்கடிகளையும் பேரழிவுகளையும் முன்பைவிட துல்லியமாக கணிக்க உதவும்,” என தெரிவித்தார்.
