கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பை சேர்ந்த அகில் அசோகன் (34), தனது பேஸ்புக் பக்கத்தில் ஆடு விற்பனைக்கு இருப்பதாக பதிவிட்டு, அதில் தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்து, பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த கணவரை இழந்த 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் அவரை தொடர்பு கொண்டார். தொடக்கத்தில் சாதாரண உரையாடலாக இருந்தது, பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அகில் அசோகன், அடூரில் உள்ள வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்தப் பெண் கர்ப்பமாகினார். பின்னர் கர்ப்பத்தை கலைக்க, மாத்திரைகளை வாங்கி கொடுத்தும், கர்ப்பம் கலைக்கப்படவில்லை. இதனால் பயந்து போன அகில் அசோகன், தனது மொபைல் எண்ணை மாற்றி கொண்டு பெண்ணை விட்டு விலகி தப்பியோடி விட்டார். திருமண வாக்குறுதியுடன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், அடூர் போலீசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அகில் அசோகன் திருமண வாக்குறுதி அளித்து விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதும், பின்னர் பொறுப்பேற்காமல் தப்பியோடியதும் உறுதி செய்தனர். உடனடியாக அகில் அசோகன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.