நீலகிரி மாவட்டம் தட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன். இவருக்கு 39 வயது ஆகிறது. வியாபாரியான நவநீதனுக்கு திருமணமான ஒரு பெண் மீது ஆசை வந்தது. அந்த பெண்ணுக்கு கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த பெண் ஊட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வேலைக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் அந்த பெண் வேலை முடிந்து கல்லட்டி சாலையில் நடந்து ஊட்டி வந்து அதன் பிறகு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். அந்த பெண் கல்லட்டி சாலையில் நடந்து சென்ற போது நவநீதன் அவரை பின்தொடர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று செல்போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் நவநீதனை திட்டி அனுப்பினர். அந்த பெண் எங்கு சென்றாலும் நவநீதன் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு அளித்துள்ளார். விஷயத்தை கூறினால் கணவர் வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார் என்ற அச்சத்தில் அந்த பெண் கணவரிடம் இதைப் பற்றி கூறாமல் இருந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று ஊட்டி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த நவநீதன் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் கோபமடைந்த நவநீதன் வலுக்கட்டாயமாக அவரது கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயற்சி செய்தார்.
இதனை எதிர்பாராத அந்த பெண் அலறி சத்தம் போட்டதால் பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் நவநீதன் தப்பி சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நவநீதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
