திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் லாரி ஓட்டுனர். இவரது மனைவி சுபா. இந்த தம்பதியினருக்கு ஹீமதி (16) என்ற மகளும் லோகேஷ்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சுபா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஹீமதி லோகேஷ் ஆகிய இருவரும் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறி மகனையும் மகளையும் ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் செல்லப்பாண்டி தனது மகனுக்கும் மகனுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்துள்ளார்.

ஹீமதி அந்த பாலை குடித்த நிலையில் லோகேஷ் பாலை தட்டி விட்டு ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது செல்லப்பாண்டி உயிரிழந்து கிடந்தார். ஹீமதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.