நீலகிரி மாவட்டம் ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். செந்தில்குமார் கடந்த ஜூன் மாதம் ஊட்டி அருகே இருக்கும் அரசு பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். அந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்றனர்.
அப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி ஒருவர் செந்தில்குமார் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுமார் 21 மாணவிகளுக்கு செந்தில்குமார் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
