கிரிக்கெட் உலகின் ‘கடவுள்’ என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன், ஆல்ரவுண்டர் அர்ஜூன் டெண்டுல்கர், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த சானியா சந்தோக் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். லோகல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வரும் 25 வயதான அர்ஜூன், இடதுகை பந்து வீச்சளராகவும் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அறியப்படுகிறார்.

2018ல் இலங்கைக்கு எதிராக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் அறிமுகமான அவர், தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சானியா சந்தோக் ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல துறைகளில் வணிக முயற்சிகள் கொண்ட முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அர்ஜூன் – சானியா நிச்சயதார்த்தம் எளிமையான முறையில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. WVS-இல் ABC திட்டத்தை முடித்து கால்நடை தொழில்நுட்ப வல்லுநராக சான்றிதழ் பெற்றுள்ள சானியா, செல்லப் பிராணிகளுக்கான தோல் பராமரிப்பு பிராண்டான ‘Mr. Paws’ நிறுவனராவார். இவர்களின் நிச்சயதார்த்த செய்தி வெளியாகியதும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.