தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் நாளை (ஆ.14) பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தைத் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளது.
‘கூலி’ திரைப்படம் வெளியாகும் நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கிய ரஜினிகாந்த், இன்று வரை 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘கூலி’ அவரது 171வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும், தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை கடந்த தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்துக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்!
இப்பொன்விழா ஆண்டில், அவர் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்!” என தெரிவித்துள்ளார்.
