ஆண்களின் விதைப்பைகள் (ஸ்க்ரோடம்) உடல் வெப்பநிலையைப் பொறுத்து சுருங்குவதும், தொங்குவதும் இயற்கையான உடலியல் செயல்பாடாகும். உயிரணுக்களின் (ஸ்பெர்ம்) உற்பத்திக்கு உகந்த வெப்பநிலை உடல் வெப்பத்தைவிட சற்று குறைவாக இருக்க வேண்டும் என்பதால், கோடை காலத்தில் அல்லது வெப்பமான சூழலில் விதைப்பை தளர்ந்து கீழே தொங்கிய நிலையில் இருக்கும்.
இது உடல் வெப்பத்திலிருந்து விதைப்பந்துகளைத் தொலைவில் வைத்து குளிர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது. அதேபோல, குளிர்காலத்தில் அல்லது குளிர்ச்சியான சூழலில் க்ரெமாஸ்டர் தசை (cremaster muscle) சுருங்கி, விதைப்பந்துகளை உடலுக்கு அருகில் இழுத்துக்கொள்ளும். இது விதைப்பந்துகளை சூடுபடுத்தி உயிரணுக்களைப் பாதுகாக்கும். இந்த வெப்பநிலை கட்டுப்பாடு இயற்கையானது என்பதை மருத்துவ ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
View this post on Instagram
“>
அதீத உணர்ச்சிகளான கோபம், பயம், கவலை அல்லது சோகத்தின் போது விதைப்பந்துகள் சுருங்கி மேல்நோக்கி இழுக்கப்படுவதும் க்ரெமாஸ்டர் தசையின் பிரதிபலிப்பு (cremasteric reflex) காரணமாக நிகழ்கிறது. இந்த உணர்ச்சிகள் உடலின் ‘போராடு அல்லது ஓடு’ (fight-or-flight) பதிலைத் தூண்டும் போது, அனுதாப நரம்பு மண்டலம் செயல்பட்டு தசையை சுருக்குகிறது. இது விதைப்பந்துகளுக்கு ஆபத்து வரலாம் என உடல் உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் வகையில் நடக்கிறது.
இது பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் இயல்பான நிகழ்வேயன்றி, எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் அல்ல. இதனைத் தங்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினையாகக் கருதி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
