மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. மனைவியின் உடை அல்லது சமையல் குறித்த கணவரின் கருத்துக்கள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A-இன் கீழ் ‘கொடுமை’ என கருதப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அவுரங்காபாத் பெஞ்சின் நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் சஞ்சய் ஏ தேஷ்முக் தலைமையில், மனைவியின் புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மற்றும் குற்றவியல் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளனர். மனைவியின் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை, முரண்பாடானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.

இந்த வழக்கு, 2022 மார்சில் தனது இரண்டாவது திருமணமாக அந்த நபரை மணந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கியது. திருமணத்துக்கு ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, தன்னை சரியாக நடத்தவில்லை என்றும், கணவரின் உடல் மற்றும் மனநல குறைபாடுகளை திருமணத்திற்கு முன் மறைத்துவிட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தீபாவளியன்று ஒரு பிளாட் வாங்க ரூ.15 லட்சம் கேட்டதாகவும் கூறினார். ஆனால் கணவர் ஏற்கனவே பிளாட் வைத்திருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி, இந்தக் கூற்றை சந்தேகத்திற்குள்ளாக்கியது. திருமணத்திற்கு முன்பே பரிமாறிக் கொண்ட அரட்டைகள், கணவர் தனது உடல்நிலை குறைபாடுகளை வெளிப்படையாக பகிர்ந்திருப்பதை காட்டியதால், மனைவிக்கு முன்கூட்டியே இது தெரிந்திருந்தது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

மேலும், குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுவானவையாக இருந்ததால், எந்தச் சான்றுகளும் இல்லாதது என்றும், குற்றப்பத்திரிகையில் மனைவியின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. விசாரணை அதிகாரி கூட அண்டை வீட்டாரை விசாரிக்காதது குற்றமாக குறிப்பிடப்பட்டது.

“உறவில் விரிசல் ஏற்பட்டபின் மிகைப்படுத்தல்கள் நடப்பது வழக்கம். இத்தகைய குற்றச்சாட்டுகளை 498A பிரிவில் கொண்டு வருவது சட்ட நடைமுறையின் தவறான பயன்பாடு” எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.