மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனம்தா அகமது(16) தனது கை மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் செய்த ரியா மிஸ்திரி என்பவரின் அண்ணன் சிவம் மிஸ்திரிக்கு தனது கைகளால் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமி ரியா மூளை சாவு அடைந்தபோது அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்தனர். அதன்படி ரியாவின் கை அனம்தா அகமதுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. அவரது வலது கை கடந்த 2022 ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கியதால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அனம்தா தனது குடும்பத்துடன் ரியா குடும்பத்தினர் வசிக்கும் இல்லத்திற்குச் சென்று ரியாவின் அண்ணன் சிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டி அவரை சகோதரராக ஏற்றுக் கொண்டார். தனது சகோதரி ரியாவின் கையைக் கொண்ட அனம்தா தனக்கு ராக்கி கட்டி விட்டபோது 14 வயது சிறுவன் சிவம் ஆனந்த கண்ணீர் விட்டார். மதங்களைக் கடந்த இந்த பிணைப்பு அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
