ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கி வருவதால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். டிரம்ப் உடனுக்குடன் முடிவுகளை மாற்றுபவர் என்பதால், இந்த வரிவிதிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், பரிச்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, புதிய ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

ஆனால், இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர், “அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளிவந்த செய்திகள் தவறானவை மற்றும் கற்பனை செய்யப்பட்டவை. பல்வேறு கொள்முதல் செயல்முறைகள், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடைபெற்று வருகின்றன” எனத் தெளிவுபடுத்தினார்.