வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி, கடந்த 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மேலும் 25 சதவீதம் உயர்த்தி, மொத்தம் 50 சதவீத வரியாக்கியுள்ளார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தொடர்புகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. நான்கு சுற்று பேச்சுகள் முடிந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக் குழு இம்மாதம் 25ஆம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தது. ஆனால், வரி உயர்வு அறிவிப்பின் பின்னர், இந்த திட்டம் சிக்கலில் சிக்கியுள்ளது.
வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், “இந்தியா மீது 50 சதவீத வரி விதித்திருப்பதால், வர்த்தக பேச்சுவார்த்தை வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இல்லை. வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை, இந்தியாவுடன் எந்தவித வர்த்தக பேச்சுவார்த்தையும் நடைபெறாது” எனத் தெளிவுபடுத்தினார்.
