பரிதாபங்கள் என்ற யூடுயூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் கோபி- சுதாகர். இவர்களது சேனலை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பரிதாபங்கள் சேனலில் “சொசைட்டி பாவங்கள்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சமீபத்தில் நெல்லையில் நடந்த ஆணவ படுகொலை தொடர்பாக சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பரிதாபங்கள் சேனல் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கும் விதமாக பேசியிருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கூறியதாவது, “சமீபத்தில் சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு எதிராக மிரட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதி வெறி கும்பல்கள் கோபி சுதாகருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
எனவே கோபி சுதாகருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பேசிய அவர்கள், கோபி சுதாகருக்கு தமிழக அரசு எம்.ஆர் ராதா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அவர்கள் சமூக நலமுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் அவர்களை தகுந்த முறையில் கௌரவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
