விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் திருத்த நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

பீகாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சுருக்க திருத்த நடவடிக்கையில், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட சமூகப் பகுதிகளின் வாக்குகளை நீக்கும் நோக்கத்துடன் செயல்படப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார். ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக்குவதன் மூலம், சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சோதனை நடவடிக்கையாக இது இருக்கலாம் என்ற ஐயம் எழுவதாக தெரிவித்தார்.

மேலும், “இந்த வேலை திட்டமிட்ட முறையில் நடைபெற்று வருகிறது. இது பற்றிய விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்த மத்திய அரசு தயார் இல்லை. அதனால் இரு அவைகளையும் தள்ளிவைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பிற மாநிலங்களிலும் விரிவடைய வாய்ப்பு இருப்பதுடன், தமிழகத்திலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்நடவடிக்கை தமிழக வாக்காளர்களுக்கும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சி இருக்கும் போது, அதே சமயம் தமிழகத்தின் மீதான ஆதிக்கம் நிலைநாட்ட பா.ஜ.க.வின் ரகசிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

மேலும், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி, இந்த செயல்களை எதிர்க்க வலிமையான முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேரக்கூடாது என உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். “இது தமிழ்நாட்டின் அரசியல் நிலையை வேறு பாதைக்கு திருப்பி விடும் அபாயத்தை உருவாக்கும்” என்றும் எச்சரித்தார்.