வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களுடன் பேசும்போது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதேபோன்று ஒரு திட்டத்தை அறிவித்திருப்பது குறித்து அவர், “ஒரு மாநிலத்தில் ஒரு திட்டம் சிறப்பாக செயல்பட்டால், அதைப் பயன்படுத்த மற்ற மாநிலங்களும் விரும்புவார்கள்.

அதனால்தான் மம்தா பானர்ஜியும் இதுபோன்ற திட்டத்தை மேற்குவங்கத்தில் கொண்டு வந்திருக்கிறார். திட்டங்கள் நன்றாக இருந்தால், அது பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும் என்பது இயற்கை,” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பெயருக்கெதிராக அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்திருப்பதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கோர்ட் என்ன சொல்றதோ அதற்கே நாங்க கட்டுப்படுவோம்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.

தமிழகத்தில் தொடரும் ஆணவக் கொலைகள் மற்றும் அதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையைக் குறித்து அவர் கூறியதாவது, “ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது. இது ஒரு நாட்டின் சட்ட ஒழுங்கு முறையை சீர்கெடுக்கும் முக்கியமான விளைவாகும். அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தனிச் சட்டம் இயற்றப்படுமா என்பது முதல்வரின் பரிசீலனையில்தான் இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் பேசும் அவர், “பா.ஜ.க. தமிழகத்தில் வாக்கு வங்கி பெருக்க, வெளிமாநிலத்தவர்களை கொண்டு வர முயலுகிறது என்ற குற்றச்சாட்டைத் தட்டி கேட்க வேண்டியது அவசியம். பீகாரில் வாக்காளர் பட்டியலில் எத்தனையோ தில்லுமுல்லுகளைச் சேர்க்க பா.ஜ.க. முயன்றிருக்கிறது. அவர்களுக்கு அவர்களது மாநிலத்திலேயே வேலை இருந்திருந்தால், இங்கு வந்திருக்கமாட்டார்கள்.

இது மிகப்பெரிய பிரச்சனை. இது மற்ற மாநிலங்களுக்கும் பரவலாம். அதனால் விழிப்புடன் இருக்க வேண்டும். எங்களுக்கு அந்த ஆபத்து நேர்ந்தால், அதை எதிர்க்க சிங்கமாக சீறி நிற்போம்,” என்று வலியுறுத்தினார்.