கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் செயல்படும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (KRIDL) என்ற அரசு நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய கலகப்பா நிடகுண்டி என்பவர் ரூ.15,000 மாத சம்பளம் பெறுகிறார்.

ஆனால் அவரிடம் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.30 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் உள்ள சொத்துகளை பட்டியலிட்டு பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சோதனையில், கலகப்பா மற்றும் அவரது மனைவி, சகோதரர் ஆகியோரின் பெயரில் 24 வீடுகள், 4 மனைகள் மற்றும் 40 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது. கூடுதலாக 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துகள் அவருடைய சம்பளத்தை பொறுத்தவரை மிகவும் சந்தேகமானவை என்பதால், லோக்ஆயுக்தா அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், முன்னாள் KRIDL பொறியாளர் Z.M. சின்சோல்கருடன் இணைந்து, முடிக்கப்படாத 96 திட்டங்களுக்கு போலி பில்ல்கள் தயாரித்து ரூ.72 கோடியே அதிகம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் சோதனை நடத்தினர். வடிகால் அமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களில் அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதும் லோக்ஆயுக்தா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ஊழியர் இந்த அளவுக்கான சொத்துகளை அவரது பணிக்காலத்திலேயே ஊழலால் சம்பாதித்தாரா, அல்லது பணிநிறைவு பிறகு திட்டமிட்டு முறைகேடு செய்தாரா என்பதை அதிகாரிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர்.