சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டம் அதௌரா கிராமத்தில், கடந்த ஜூலை 29ம் தேதி, ஒரு வீட்டில் அரைநிர்வாண நிலையில் 40 வயது மனோஜ் குப்தா என்ற நபரின் சடலம் கிடைத்தது. அந்த வீடு அவரது முதல் மனைவி பார்வதி குப்தாவுக்கு சொந்தமானது.  முதல் மனைவியுடன் குடும்பத்தில் இடைவெளி ஏற்பட்ட பின்னர், மனோஜ் குப்தா இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று, பார்வதி தனது முன்னாள் கணவரிடம் “வீட்டில் மின்சாரம் இல்லை, சரி பார்த்து கொடுக்க முடியுமா?” என கூறி, வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளார். வீட்டிற்கு வந்த மனோஜ் குப்தாவை, அவர் திடீரென கைகளும் கால்களும் கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொன்றுள்ளார். பின்னர் அதை ஒரு விபத்து போல காட்ட முயற்சி செய்தார். ஆனால், மனோஜின் இரண்டாவது மனைவி சந்தேகம் வெளியிட்டதையடுத்து, போலீசார் விரிவாக விசாரணை நடத்தினர்.

மரணமான மனோஜின் உடலில் தீக்காயங்கள், மின்கம்பிகள், கைகால்கள் கட்டப்பட்ட தடயங்கள் இருந்ததால், இது தற்கொலை அல்ல, கொலை என உறுதி செய்யப்பட்டது. போலீசாரிடம் விசாரிக்கும்போது, முதல் மனைவி பார்வதி, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பழிவாங்கும் நோக்கத்தில் இக்கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, பார்வதி குப்தாவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.