மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த 4–5 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கும், உயிருக்கு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருவதாகக் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், அதை சிலர் “விளம்பர யுக்தி” என விமர்சித்தனர்.
இதற்கு பதிலளிக்க தனது சமீபத்திய பேட்டியில், “நான் எந்த வகையிலும் நாடகம் ஆடவில்லை. பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வந்தேன். அந்த உணர்வுகளை வெளிப்படுத்தினேன். என் வீட்டு வாசலிலேயே கெட்ட வார்த்தைகளில் அவமதிப்பு, பிஞ்சிய வண்டியைச் செருப்பால் அடிப்பது போன்ற செயல்கள் நடந்தன. இது போன்ற தொடர் தாக்குதல்களுக்கு நடுவே, நான் அமைதியான ஆன்மீக வாழ்க்கையை தொடர்ந்து வாழ முயற்சிக்கிறேன்” என்றார்.
அதுமட்டுமல்லாமல், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் நடிக்கவிருந்ததை அவர் நினைவூட்டினார். தற்போது தனக்கு நேரும் துன்புறுத்தல்களும், சுஷாந்தின் மரணத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து “எனக்கு ஒரு ஆழ்ந்த உணர்வு இருக்கிறது” என கூறிய அவர், இது மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஸ்ரீ தத்தாவின் இந்த அறிக்கைக்கு, பாலிவுட் முன்னாள் நடிகை சோமி அலி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாலிவுட்டில் நீண்ட நாட்களாக இருந்து வரும் ‘நச்சுத்தன்மை’ கலாசாரம் மீண்டும் விவாதத்திற்கு வருவதாக சோமி அலி தெரிவித்தார். மீடூ இயக்கத்தின் ஒரு முக்கிய முகமாக திகழ்ந்த தனுஸ்ரீ, மீண்டும் தனது உரிமைகளுக்காக சத்தமிட்டு வருவதை பலரும் தைரியமான செயலாக பாராட்டியுள்ளனர்.
