தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, இயக்குநர் கவுதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கிங்டம்’. இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. அதிரடி ஆக்சன் மற்றும் உணர்ச்சிகளுடன் கூடிய முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘கிங்டம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும், ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக, தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வருகிற ஜூலை 31ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘கிங்டம்’ திரைப்படத்தின் ஆட்சன் மற்றும் உணர்ச்சி காட்சிகளை துல்லியமாக காட்டும் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. இதனை விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள். டிரெய்லரில் இடம்பெற்ற விசுவாசமும், துரோகமும் கலந்த சிக்கலான கதைக்களம் மற்றும் அனிருத் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘கிங்’ போன்று மீண்டும் திரையுலகில் கலக்க தயாராக உள்ள விஜய் தேவரகொண்டாவின் இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.