கோவை மாவட்டம் இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவரது கணவர் ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தமிழரசி, தனது நான்கரை வயது மகள் அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்தார். கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர், சமூக வலைதளங்களில் முகநூல் வீடியோக்கள் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழரசி வேலை பார்த்த கட்டிட இடத்தில் பணியாற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் என்பவருடன் சில மாதங்களாக பழகினார். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தமிழரசியின் மகள் அபர்ணாஸ்ரீ மர்மமான முறையில் உயிரிழந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், தமிழரசியை பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடக்கத்தில், “குழந்தை அழுது கொண்டிருந்ததால் கோபத்தில் அடித்தேன்; அதனால் உயிரிழந்தது” என தமிழரசி தெரிவித்தார். ஆனால், போலீசார் தொடர்ந்த தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.

விசாரணையில், வசந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற தமிழரசிக்கு, “குழந்தை இருந்தால் உறவை ஏற்க மாட்டேன்” என்று வசந்த் கூறியதாகத் தெரிகிறது. இதனால் இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக தமிழரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் தமிழரசியை கைது செய்தனர்.

மேலும், குழந்தை கொலையைத் தூண்டியதாக வசந்தையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் செயல் குறித்து போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயே கள்ளக்காதலுக்காக நான்கரை வயது மகளை படுகொலை செய்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.