நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்த ஹசன் அபுபக்கர், மேலப்பாளையத்தில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். அவரது மகன் ரபீக் (வயது 39), அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரபீக், அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை தனியாக அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவிக்கு யாரிடமும் இதைப்பற்றி சொல்லக்கூடாது என மிரட்டியதோடு, சாக்லெட் வாங்கும் வகையில் பணமும் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை தெளிவாக தெரிவித்துள்ளார். உடனே அவருடைய பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் ரபீக் மாணவிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் ரபீக் மீது “போக்சோ” (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
