இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெற ‘ரீல்ஸ்’ வீடியோ உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது.இதற்காக, தங்களை அசத்துவதற்கான ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதும், அவை உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் விஷயங்களாக மாறுவதும் கவலைக்குரியது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இரு இளைஞர்கள், தங்களது மனைவிகளை மோட்டார் சைக்கிளின் முன்புற பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்த நிலையில், அதிவேகமாக புறவழிச் சாலையில் பயணம் செய்து ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

திருத்தணி-அரக்கோணம் புறவழிச் சாலையில் எடுக்கப்பட்ட இந்த ஆபத்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், வழிகாட்டிகள், வேகத்தடைகள் ஆகியவற்றை மிக வேகமாக கடந்து செல்வது, எந்தவித பாதுகாப்பும் இல்லாத பெண்கள் முன்பக்கத்தில் இருப்பது போன்ற காணொளிகள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த இருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் உள்ளனர். இவ்வகை ஆபத்தான ‘ரீல்ஸ்’ செய்யும் இளைஞர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது வீடியோவின் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தலா 3000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.