திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரது பணியிடம் மற்றும் தங்கும் அறையில் தற்போது போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர், ஆந்திராவின் சூலூர் பேட்டை அருகே உள்ள ஒரு தாபாவில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த தகவலின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட போலீசார், ஆந்திரா போலீசாருடன் இணைந்து, அந்த தாபாவில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது, அவரது அறை முழுவதுமாக பார்வையிடப்பட்டு, அவரது உடைமைகள், ஆவணங்கள் மற்றும் மற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஏற்கனவே அவரிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களை உறுதி செய்வதற்காகவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த தாபாவில் பணியாற்றும் பிற ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கூட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இளைஞர் இவ்வாறு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது ஒருமுறை மட்டுமா அல்லது இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்யும் விதமாக விசாரணை விரிவாக நடைபெற்று வருகிறது.
அதற்குப் பின், அந்த இளைஞரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவில் அவர் மீதான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதும், அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
