கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கம்மாபுரம் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் என்பவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 22ம் தேதி, வேலை விடுமுறை பெற்று தனது ஊரான கம்மாபுரத்திற்கு வீட்டுக்கு  வந்திருந்தார். அப்போது, வீட்டில் தனது தாயாரான பத்மாவதியுடன் சொத்து தகராறு குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கோவையில் இருந்து கொண்டுவந்திருந்த ஏர் கன் துப்பாக்கியை பயன்படுத்தி தனது தாயை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் பத்மாவதியின் கால் மற்றும் தொடையில் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பார்த்த உறவினர்கள் உடனடியாக பத்மாவதிக்கு முதலுதவி செய்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவருக்கு மேல்  சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் முறையாக வெளிவராமல்,  போலீசாரால் மூடிமறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பின்னர் உளவுத்துறை வழியாக சம்பவம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பவம் உண்மை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவத்தை உடனடியாக மேலதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்ததாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் காவலர் சரவணன் ஆகிய இருவரும் ஆயுதப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு எந்த காவலர்கள் தொடர்புடையவர்களா என்ற கோணத்தில் விரிவான விசாரணை மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயை துப்பாக்கியால் காயப்படுத்திய வீரபாண்டியனை போலீசார் கைது செய்து, துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் ஊர்மக்களிடையே பெரும் அதிர்வையும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது.