தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தில் மலேசியா சுந்தரம் நகைக்கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த கடையின் உரிமையாளர் ராஜா. இவர் தனது கடையில் சீட்டு பணம் பழைய நகைகளை கொடுத்தால் அதே எடையில் குறைந்த செய்கூலி சேதாரத்தில் புதிய டிசைன் நகைகளை செய்து கொடுப்பது, நகைகளாக கொடுத்தால் ஆபரணங்களாக செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகம் படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக ராஜா வாடிக்கையாளர்களின் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட 85க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ராஜா சீட்டு பணம் மற்றும் நகைகளை வாங்கி பலரை ஏமாற்றிவிட்டு தலை மறைவாகிவிட்டார்.

சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் கொடுத்த தங்கம் வெள்ளி நகைகளை மீட்டு தர வேண்டும் சீட்டு பணத்தையும் திரும்ப பெற வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிவசங்கரி என்ற பெண் கண்ணீருடன் கூறியதாவது, என் தங்கையின் திருமணத்திற்காக பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்க திட்டமிட்டோம்.

ஆகஸ்ட் மாதம் என் தங்கைக்கு திருமணம். ராஜா சுமார் 17 கிராம் தங்க நகை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார். இப்போது என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். போலீசார் நகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆவணங்களோ தங்க நகைகளோ இல்லை. தங்க முலாம் பூசப்பட்ட சில கவரிங் நகைகளும் வெள்ளி நகைகள் மட்டுமே இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.