கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பூப்பணி பகுதியில் நடந்த வனவிலங்கு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெரிய அளவிலான பேரல்களில் சாராயம் பதுக்கி வைத்து, அதனை காய்ச்சும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சாராயம் அழிக்கப்பட்டு, அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரென போலீசார் விசாரிக்க தொடங்கினர்.

இந்தநிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் சாராயம் வைத்திருந்த இடத்துக்கு வந்த ஒரு குட்டி யானை, அந்த சாராயத்தை தவறுதலாக குடித்துள்ளதாக தெரிகிறது. சாராயம் குடித்த யானை, அதன் இயல்பான நடமாட்டத்தைவிட வேறுபட்ட மாதிரியான போதையான அச்சுறுத்தலாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் அது புகுந்து சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், பிளாஸ்டிக் பேரல்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். மேலும், அந்த யானையை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பட்டாசு வெடிப்புகள், சத்தம் எழுப்புதல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன. அதனையடுத்து, யானை காடிற்குள் விரட்டப்பட்டது.

வனத்துறையினர் கூறியதாவது,  அட்டப்பாடி பகுதியில் சட்டவிரோத சாராய தயாரிப்பு இடங்கள், யானைகளின் குடியிருப்பு புகுந்தலை அதிகரிக்க முக்கிய காரணம். இதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.