விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பொதுச் செயலாளர் ஆனந்த் இறுதியாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்கு வந்த மேல்மலையனூர் ஒன்றிய துணைச் செயலாளர் இருந்த சரண்ராஜ் தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று கூறி முழக்கமிட்டார்.
அதோடு “கழகமே நீதி வேண்டும் குறைகளை கேட்க வேண்டும், செஞ்சியில் தொகுதி நிர்வாகிகளின் பிரச்சனையைக் கேள்” என்ற பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் திருமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதாகை மற்றும் பேனர்களை பிடுங்கி எரித்தனர். அப்போது விஜய் படத்துடன் இருந்த அந்த பதாகையை தவெக தொண்டர்கள் சிலர் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் நலத்திட்ட உதவிகளை முழுமையாக கொடுக்காமல் பாதியிலேயே ஆனந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
