பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 86வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராமதாஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘அய்யா’ என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயோபிக் திரைப்படத்தை பிரபல இயக்குநர் சேரன் இயக்கவுள்ளார். தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் இப்படத்தை தயாரிக்கிறார். இன்று ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அய்யா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு” என்ற கருப்பொருளில் உருவாகும் இந்த படத்தில், அவரது அரசியல் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மையமாக இடம்பெறவுள்ளன.

முன்னதாக, ‘அய்யா’ படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் ஆரியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் சம்மதம் தெரிவித்ததால், தற்போது படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம், பாமகவின் ஆரம்பகால கட்டம் முதல் அரசியல் உழைப்புகள், சமூக நீதிக்கான போராட்டங்கள் என பல முக்கிய நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ளது. ‘அய்யா’ படம் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல், சமுதாய விடுதலைக்கான ஓர் ஆவணமாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறைக்கு ஒரு வரலாற்று கண்ணோட்டத்தை வழங்கும் வகையில் இந்தப் படம் தயாராகிறது.