கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் எம்ஜிஆர் சாலையில் அய்யனார் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி அய்யனாரின் கடையில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைக்க ஒரு பெண் வந்துள்ளார். அவரிடம் உரிமையாளர் விசாரித்த போது தான் சீதேவி கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் மனைவி சாந்தி(50) என அந்த பெண் கூறியுள்ளார்.
அவர் தங்க மோதிரத்தை அழகு வைத்துவிட்டு 22,000 பணத்தை வாங்கி சென்றார். இதனையடுத்து கடையின் உரிமையாளர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் வங்கிக்கு நகைகளை அடகு வைக்க சென்றபோது அந்த பெண் கொடுத்தது போலியான நகை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சீதேவி கிராமத்திற்கு சென்று விசாரித்த போது நகை அடகு வைக்க வந்த பெண் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இல்லை என மக்கள் கூறியுள்ளனர். நேற்று அய்யனார் பெருமாள் கோவில் அருகே சென்றார். அப்போது போலி நகையை அடகு வைத்து பணத்தை பெற்று சென்ற அந்த பெண் அங்கு நின்றுள்ளார்.
உடனே அய்யனார் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் தர்மபுரி மாவட்டம் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி சாந்தி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
