சிவகங்கை மாவட்டம் கட்டம்மன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை கிராம மக்கள் மேய்ச்சலுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முக்குடியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மறுபகுதியில் விவசாயம் செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நேற்று மாலை அந்த வழியாக சென்ற மக்கள் கிணற்றில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த நபரின் உடலை மீட்டனர். அவர் இறந்து பல மாதங்கள் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
