திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் மிதிபாறை மேடு பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் நின்றது. அந்த காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி சேர்ந்த முருகன்.
இவர் மாநகராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் முருகன் பொருளாளராக இருப்பதால் அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
