காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வாஞ்சுவாஞ்சேரி பகுதியில், ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்த மாணவிகளில் ஒருவரை, மற்றொரு மாணவி குளித்து கொண்டிருந்தபோது தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ எடுத்தது குறித்து அதிர்ச்சி அடைந்த மாணவி நேரில் சென்று தனது தோழியிடம் இதற்கான காரணத்தை கேட்டபோது, அந்த மாணவி வாக்குமூலத்தில் இந்த வீடியோவை தனது காதலனுக்கு அனுப்பியதாகவும், அதை மீண்டும் பரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த மாணவி, மற்ற மாணவிகளுடன் சேர்ந்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்லால் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே அந்த மாணவியிடம் இருந்து வீடியோவை பெற்றவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மாணவியை மிரட்டியுள்ளாரா? அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாராவது தொடர்புடையவர்களா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட முகமது இக்லாலிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள தகவல்களை பெற்று டிஜிட்டல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.