திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலப் பிரதேஷ்வரர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். கோவில் பின்புறம் மலையை சுற்றி அமைந்துள்ள கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஆசிரமங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

இந்நிலையில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் திருவண்ணாமலையில் தங்கியிருந்தார். இவர் கிரிவல பாதை வழியாக ஒரு பூக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் அந்த பெண்ணிடம் பாலியல்  சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அவரின் நாட்டு தூதரகத்திற்கு புகார் அனுப்பிய நிலையில் அங்கிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்ற 40 வயது நபர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.