மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், உல்ஹாஸ்நகரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ரோஹித் பிபின் ஜா என்பவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர் வெளியே வந்தவுடன், அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, தாளவாத்தியத்துடன் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி கொண்டாடினர். ஆனால் அதிர்ச்சியளிக்கக் கூடியது என்னவென்றால், இந்த பேரணி பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் வீடு அருகே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இரவு நடந்த வன்கொடுமை சம்பவத்துடன் தொடர்புடையது. ரோஹித் பிபின் ஜா உள்ளிட்ட நால்வர், ஒரு வீட்டிற்குள் புகுந்து, அதிலிருந்த இரண்டு இளம் பெண்களை வலுக்கட்டாயமாக தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெண்களின் உடைகள் கிழிக்கப்பட்டு, தாக்கப்பட்டதாகவும், அக்கம்பக்க மக்களுக்கு இது கடும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீனில் வெளியே வந்த பிறகு, ரோஹித் ஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் – ஆஷிஷ் ஜா, ஹன்சு ஜா, பிட்டு யாதவ் ஆகியோர் இணைந்து, கேம்ப் 2 பகுதியில் உள்ள ரமாபாய் டெக்டி பகுதியில் பாதிக்கப்பட்டவின் வீட்டருகே நோக்கி பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

“>

 

பட்டாசுகள் வெடித்து, தாளவாத்தியங்களுடன் பைக்கில் ஊர்வலம் வந்த இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளன. இந்த சம்பவம் சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரடியாக அச்சத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோக்கள் வைரலாக பரவியதை அடுத்து, தானே போலீசார் தனிப்படையாக விசாரணையை தொடங்கியுள்ளனர். கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களின் அடையாளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. டிஜிபி  சச்சின் கோர் கூறியதாவது, “சம்பவத்தை மையமாக வைத்து புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டம் ஒரு சட்டவிரோதமான செயல் மட்டுமல்ல, ஒரு வன்முறை குற்றத்திற்கு ஆதரவு தரும் செயலாகவும் பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார். தற்போது குற்றவாளிகள் மீது மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.