ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது இயங்கும் 90% அணைகள் வறண்ட நிலையில், சில முக்கிய நகரங்கள் மற்றும் மாநிலங்களில் போதுமான தண்ணீர் அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஈரானின் எரிசக்தி அமைச்சகம் தெஹ்ரான், இஸ்ஃபஹான், ரசாவி கோரசான், யாஸ்ட் போன்ற இடங்களில் நீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தெஹ்ரானுக்குத் தண்ணீர் வழங்கும் கராஜ் அணை தற்போது 6% திறன் மட்டுமே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சட்டவிரோத நீர் பயன்பாடு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அப்பாஸ் தெரிவித்தார். மேலும், ஈரானின் தன்னிறைவு பெற்ற விவசாய முறையே அதிக நீர் நுகர்வுக்கு காரணமாக இருப்பதாகவும், நகர மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என கூறப்படுகிறது.
அதேவேளை, அரசு வெளியிட்டுள்ள “130 லிட்டர்” வரம்பை தற்போது நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் நீரியல் பேராசிரியர் கூறுகையில், “ஒரு நகர்ப்புற குடிமகனுக்கு குறைந்தது 190 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கம் 130 லிட்டராக வரம்பிடுவது முற்றிலும் நடைமுறை யோசனையல்ல” என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து, தண்ணீர் தொடர்பான அரசின் செயல்திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
