வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் புத்தர் நகர் பகுதியை சேர்ந்த பைரோஷ் (22) என்ற இளைஞர், சத்துவாச்சாரி பகுதியில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் நட்பை கடந்த காதலாக மாறியுள்ளதாக தெரிகிறது. பைரோஷ், அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி, நெருக்கமாக பழகிய நிலையில், சிறுமி கர்ப்பமாகும் நிலை உருவானது.

சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர், மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டதில் 7 மாத கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், விசாரணை செய்ததில் கர்ப்பத்திற்கு பைரோஷ் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், இருவரும் நெருங்கி பழகியதுடன், பைரோஷ் சிறுமியின் வயதை அறிந்தபோதும் தவறான உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே, கடந்த ஜூலை 20ம் தேதி, சிறுமி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி  உள்ளார். இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார், சிறுமியின் வயதையும் கருத்தில் கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பைரோஷை கைது செய்தனர்.