திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக போலீசார் கடந்த 12 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

குற்றவாளியின் சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேடுதல் நடக்கின்றது.

இந்த நிலையில், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர், பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலவே உடையணிந்து இருந்ததாகவும், முக அமைப்பும் ஒருவிதம் ஒத்துப்போகிறது எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக திருவள்ளூர் மாவட்ட போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த நபரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது, அந்த நபர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், குடிபோதையில் கீழே விழுந்து காயம் அடைந்ததால் ராஜிவ் காந்தி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இவர் அணிந்திருந்த டீஷர்ட் வண்ணம் கடந்த குற்றவாளி அணிந்திருந்த உடைக்கு ஒத்ததாக இருந்தாலும், சிறு வித்தியாசம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த நபரின் புகைப்படத்தை எடுத்துசென்று, சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சியுடன் ஒப்பிடும் சயின்டிபிக் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசார் கூறுகையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர் குற்றவாளி  என்பது உறுதி ஆகவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது  எனத்  தெரிவித்துள்ளனர். இருப்பினும், எந்தவிதமான சிக்கலையும் தவிர்க்க, அதிகாரப்பூர்வமாக சாட்சிகள், சிசிடிவி மற்றும் டிஎன்ஏ போன்ற நுட்ப ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வழக்குக்குரிய தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை பிடிக்க வேகமாக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.