உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் ஹம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி (வயது 40) என்பவர், அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் ஷம்வீர் என்பவருடன் வாழ்ந்துவரும் அஞ்சலி, வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்ற நிலையில், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் மாயம் போனதாக புகார் பதிவு செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து காலை, பாரத் பகுதியில் உள்ள கொடனா கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த வீட்டு அருகே பிளாஸ்டிக் பையில் அரைநிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த சடலம் மாயமான அஞ்சலியின் உடலாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், சடலத்தில் துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருந்ததோடு, உடலின் மேல் பகுதியில் தாக்கிய காயங்கள் இருந்தன . இது, அஞ்சலியை கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து, சடலத்தை ஆள் நடமாட்டமில்லாத கட்டிடம் அருகே தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்பதற்கான சந்தேகத்துக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக அஞ்சலியின் கணவர் ஷம்வீரின் சகோதரர் பூபேந்திரா மீது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். “முன்னமே சில குடும்ப பிரச்சனைகள் இருந்தன, அதைத் தொடர்ந்து இந்த கொலை நடந்திருக்கலாம்” என்று உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், தற்போது வரை பூபேந்திராவிடம் அதிகாரப்பூர்வமாக போலீசார் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூரமான சம்பவம் ஹம்பூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
